

இந்திய மண்ணையும், கலாச்சாரத்தையும் முஸ்லிம்கள் வணங்க வேண்டும். கடவுள் ராமர், கிருஷ்ணர், சிவன் ஆகியோர் இந்திய முஸ்லிம்களின் மூதாதையர்கள் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சி குறித்து பாலியா நகரில் உ.பி. சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் மூதாதையர்கள் கடவுள் ராமர், கிருஷ்ணர், சிவன். இந்திய மண்ணையும், கலாச்சாரத்தையும் வணங்க வேண்டும்.
சிரியா, ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உலகை இஸ்லாமிய அரசாக மாற்ற விரும்புகிறார்கள். இந்தியாவில் கூட இந்த மனநிலை இருந்தது. ஆனால், பிரதமர் மோடி, ஆதித்யநாத் அரசும், மத்தியில் ஆளும் அரசும் இந்துத்துவா கொடியை உயர்த்தியும், இந்தியக் கலாச்சாரத்தை உயர்த்தியும் அந்த மனநிலையைத் தோற்கடித்தனர்.
தீவிரவாதிகளை ஆதரிக்கும் மனநிலையில் சமாஜ்வாதி கட்சி இருக்கிறது. அதனால்தான் அந்தக் கட்சியின் எம்.பி. ஷைபர் ரஹ்மான் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
சம்பல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பாஜக கடுமையாக எதிர்த்தது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இதுபோன்ற மனநிலையில் இருப்போர் அழிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சக்திகள் எழ முடியாது.
ஒவைஸி போன்றோர் ஹைதராபாத் நகரைக்கூட தனி தேசமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆனால், அது வெற்றி பெறாது. அங்கு இன்னும் இதே மனநிலையில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள். அவர்களின் மூதாதையர்கள் அச்சத்தால் முஸ்லிம்களாக மாறினார்கள். ஆனால், ஆதித்யநாத், மோடி ஆட்சியில் அதுபோன்ற சிந்தனை வளராது''.
இவ்வாறு சுக்லா தெரிவித்தார்.