

டெல்லியில் நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் உடையணிந்து வந்த இரு ரவுடிகள், பிரபல தாதா ஜிதேந்திர கோகியை சுட்டுக்கொன்றனர். பதிலுக்கு போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த இரு ரவுடிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு டெல்லியில் ரோகிணியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. நீதிமன்ற அறை எண் 207 அருகே திடீரென துப்பாக்கிச்சுடும் சப்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்தனர்.
அப்போது இருவேறு ரவுடி கும்பல்கள் மோதிக்கொண்டன. வழக்கறிஞர்கள் உடையில் வந்த ஒரு கும்பல் மற்றொரு ரவுடி கும்பல் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பினர் மோதலை தடுக்க போலீஸார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மாநிலங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ரவுடி ஜிதேந்தர் கோகியும் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறியதாவது:
டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ரவுடிகள் கொல்லப்பட்டனர். இதில் பலர் காயப்பட்டனர். உள்ள கட்டிடத்தில் காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் போராடினர்.
ஜிதேந்தர் கோகி, பல கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டு, கடந்த ஆண்டு முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா ஆவார். அவரை விசாரணைக்காக இன்று நீதிமன்றம் அழைத்து வந்தபோது போட்டி கும்பல் ஒன்று அவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளது.
நீதிபதி நீதிமன்றத்தில் இருந்தார். வழக்கறிஞர்கள் உடனிருந்தனர். தாதாத ஜிதேந்தர் கோகி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அப்போது வழக்கறிஞர்கள் உடையணிந்து அங்கு இருந்த இரண்டு ரவுடிகள் கோகி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸாரும் சுட்டனர். இதில் பெரும் காயமடைந்த கோகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. போலீஸ் நடத்திய பதிலடி தாக்குதலில் வழக்கறிஞர் உடையணிந்து வந்த 2 ரவுடிகளும் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் பாதுகாப்பு வளையம் கொண்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.