

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், எம்எல்ஏவாக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி சித்துவும், அவரது ஆதரவாளர்களும் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சி தலைமை, யாரும் எதிர்பாராதவிதமாக சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்தது. இதனைத் தொடர்ந்து, அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் தலைமை அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர் சிங். அதன் பின்னர், மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திர சிங் சன்னி அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது ராஜினாமா குறித்தும், மாநில அரசியல் நிலவரம் குறித்தும் இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்த அமரீந்தர் சிங், சண்டிகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:
பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, இந்த செய்தி உண்மையாக இருந்தால், அதனை நான் கடுமையாக எதிர்ப்பேன். சித்து ஒரு ஆபத்தான மனிதர். அவர் எந்த காலத்திலும் பஞ்சாப் முதல்வராக வர கூடாது. அவர் முதல்வர் பதவியில் அமர்வதை தடுக்க எந்தவித தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் பதவிக்கு அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஒரு வலுவான வேட்பாளரை நான் நிறுத்துவேன்.
தற்போது பஞ்சாபை பொறுத்த வரை, டெல்லியில் இருந்துதான் ஆட்சி நடத்தப்படு கிறது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் எனது குழந்தையை போன்ற வர்கள். அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவர்களுக்கு போதிய அளவு அரசியல் அனுபவம் இல்லை என்பது புரிகிறது. யாரோ சிலரால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். எனது அரசியல் எதிர்காலம் குறித்து நண்பர்களிடம் ஆலோசித்து வரு கிறேன்.
இவ்வாறு அமரீந்தர் சிங் கூறினார்.