

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ்ஜில் மடாதிபதி மகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து உ.பி. உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தைச் சேர்ந்த அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த திங்கள்கிழமை இறந்து கிடந்தார். அவரின் உடலை மீட்ட போலீஸார் இது தற்கொலையா என்றும் விசாரித்து வருகின்றனர்.
அவரின் அறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடிதத்தில், 'மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனக்குப் பின் மடத்தில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில் முதல்வர் ஆதித்யநாத் செவ்வாய்கிழமை அளித்த பேட்டியில், “ மகந்த் நரேந்திர கிரி மர்ம மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. சிறப்பு போலீஸ்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்படும்” எனத் தெரிவித்தார்.
நரேந்திர கிரியின் சீடர் கிரி பவான் மகராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு சீடர் ஆனந்த் கிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடி வந்தநிலையில் ஹரித்துவாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் ஆனந்த் கிரி கூறுகையில், “எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. குருஜியிடம் இருந்து பணம் பறிக்க முயன்று அதில் என்னுடைய பெயரைக் கடிதத்தில் சேர்த்துவிட்டார்கள். குருஜி அவரின் வாழ்க்கையில் ஒருபோதும் கடிதம் எழுதியது இல்லை. அவர் தற்கொலை செய்யவில்லை. அவரின் கையொப்பம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நரேந்திர கிரியின் தீவிர சீடராக ஆனந்த் கிரி இருந்துவந்தார். ஆனால், துறவறம் ஏற்பட்ட நிலையிலும், குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், ஆனந்த் கிரி மீது கோபமடைந்த நரேந்திர கிரி இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகம்பரி மடத்திலிருந்தும், நிரஞ்சன் அஹாராவிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் மடத்தின் சொத்துக்களை நரேந்திர கிரியின் கவனத்துக்கு கொண்டு வராமல் விற்றது, பல்வேறு நிதிமோசடிகள் செய்ததால் மடத்திலிருந்தே ஆனந்த் கிரி வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று சிவசேனா, சமாஜ்வாதிக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உ.பி. அரசு பரிந்துரை செய்துள்ளது.