

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட மனுக்கள் மீது அடுத்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடங்கியது.
இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடந்த 13ம் தேதி ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில் “ பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் என்பது உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். ஆதலால், வல்லுநர்கள் குழுவின் மூலம் ஆய்வு செய்வது அவசியம்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி உபாத்யாயா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
மனுதாரர்கள் கோரியபடி, பிரமாண பத்திரத்தில் தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விரிவான பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. மத்தியஅரசு சார்பில் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதனால்தான் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.
குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தி மத்திய அரசு கண்காணிப்பில் ஈடுபட்டதா இல்லையா என்று வெளிப்படையாக விவாதிக்க அரசு விரும்பவில்லை. இந்தத் தகவல்கள் நாட்டின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது. ஆனால், வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ‘‘நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை’’ என்றுகூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞர் சி.யு.சிங் ஆஜராகினார்.
இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வழக்கறிஞர் சி.யு.சிங்கிடம் கூறுகையில் “ பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர்கள் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது அடுத்தவாரம் உத்தரவைப் பிறப்பிக்கிறோம். இந்த வாரமே உத்தரவுகளை பிறப்பிக்க நினைத்தோம்.
ஆனால், குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணங்களால் வர இயலவில்லை. அடுத்தவாரம் இந்த வழக்கில் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற வழக்கறிஞர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துவிடுங்கள்” எனத் தெரிவித்தார்
கடந்த 13-ம் தேதி இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தபோது, அடுத்த சில நாட்களில் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம் எனத் தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரத்தை அமைச்சரவைச் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றம் சார்பில் வல்லுநர்கள்குழு அமைத்து விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனுதாதர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய அரசோ, பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சில தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும். என்ன மாதிரியான ஒட்டுக்கேட்பு செயலிகள் பயன்படுத்துகிறோம் எனத் தெரிந்தால் தீவிரவாதிகள் விழிப்படைந்துவிடுவார்கள் அது தேசத்தின் பாதுகாப்புக்கு சிக்கலாகும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.