

மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே (64) விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்கு அவர் காரின் ‘சீட் பெல்ட்’ அணியாததும் முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.
கார்களில் பயணம் செய்வோர் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் ‘சீட் பெல்ட்’ அணிவது இல்லை. இந்த விதிமுறை பெருநகரங்களில் மட்டுமே அமலில் உள்ளது. சிறிய நகரங்களில் இது கடுமையாக அமல்படுத்தப்படுவது இல்லை.
நெடுஞ்சாலைகள் அல்லது போக்குவரத்து குறைந்த சாலைகளில் அதிவேகமாகவும் அவசரமாகவும் போகும்போது விபத்துகள் நேரிடுகின்றன. அப்போது பெரும்பாலும் ‘சீட் பெல்ட்’ அணியாதவர்கள் உயிரிழக்கின்றனர்.
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே ‘சீட் பெல்ட்’ அணியாத தும் அவரது மரணத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படு கிறது.
இது குறித்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் ஆதர்ஷ்குமார் கூறியதாவது:
‘அமைச்சரின் மாருதி எஸ்.எக்ஸ் 4 வகை கார் மீது டாடா இண்டிகா கார் வேகமாக மோதியதால் அதிர்ச்சியில் அவர் கீழே விழுந்திருக்கிறார். அப்போது அமைச்சரின் கழுத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தலையுடன் உடலை இணைத்திருக்கும் சி-1 மற்றும் சி-2 எலும்புத்தொடர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் பாய்வது தடைபட்டதும் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம்’ என்று தெரிவித்தார்.
முண்டேவின் இறப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முண்டே பயணம் செய்தது அம்பாசிடர் கார் எனத் தவறாக கூறி இருந்தார். இதனால் சிலர் அமைச்சரின் காரை அம்பாசிடர் என தவறாகக் குறிப்பிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவப்பு விளக்கை தாண்டியதும் முக்கிய காரணம்
டாடா இண்டிகா கார் சிவப்பு விளக்கை தாண்டியதும் விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த விதிமீறலுக்கு டெல்லியில் நூறு ரூபாய் மட்டுமே அபராதம் வசூல் செய்யப்படுகிறது. எனவே இத்தகைய தவறை செய்பவர்கள் ரூபாயை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.
மேலும் விதிமீறலில் ஈடுபடுவோர் போக்குவரத்து போலீஸார் இருக்கும்போது மட்டுமே சிக்குகிறார்கள். மற்ற நேரங்களில் சிவப்பு விளக்கை தாண்டிப் போவது வழக்கமாக உள்ளது.
காரில் பயணம் செய்பவர்கள் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்பது குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மத்திய குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
‘சீட் பெல்ட்’ அணிந்து பயணம் செய்திருந்தால் நண்பர் முண்டேவின் உயிர் பிரிந்திருக்காது. பின்இருக்கை 'சீட் பெல்ட்' என்பது அழகுக்காக கொடுக்கப்பட்டிருப்பது போல் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இது பயணிகளின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. விபத்து நேரங்களில் பயணிகளின் உயிரை ‘சீட் பெல்ட்’ நிச்சயம் காக்கும். எனவே பொதுநல அமைப்புகளுடன் இணைந்து ‘சீட் பெல்ட்’ அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அமைச்சர் முண்டே மரண சோகத்திற்கு பிறகாவது ஒரு திருப்புமுனை ஏற்படட்டும் என்று அவர் தெரிவித்தார்.