

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 187 நாட்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
'கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 31 ஆயிரத்து 923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 640 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 187 நாட்களில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை இந்த அளவு குறைந்தது இதுதான் முதல் முறையாகும். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.90 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 28 லட்சத்து 15 ஆயிரத்து 731 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.77 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 282 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 46 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது..
நாட்டில் இதுவரை 55 கோடியே 83 லட்சத்து 67 ஆயிரத்து 13 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 லட்சத்து 27 ஆயிரத்து 443 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 83.39 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.