பாஜக எம்.பி.யின் பதவியை பறிக்க கோரிக்கை: தேர்தல் ஆணையம், சபாநாயகருக்கு கடிதம்

பாஜக எம்.பி.யின் பதவியை பறிக்க கோரிக்கை: தேர்தல் ஆணையம், சபாநாயகருக்கு கடிதம்
Updated on
1 min read

உ.பி. பாஜக எம்.பி. சத்யபால் சிங்கின் பதவியை பறிக்க கோரி தேர்தல் ஆணையம், மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு அனில் கல்கலி என்ற தகவல் உரிமை செயற்பாட்டாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அனில் கல்கலி மும்பையில் நேற்று கூறியதாவது:

மும்பை காவல் துறை ஆணையராக இருந்த சத்யபால் சிங், கடந்த 2014-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக சார்பில் பக்பத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

ஆனால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை பிரமாண பத்திரத்தில் மறைத்துவிட்டார்.

உயர் அதிகாரிகளுக்கான அரசின் மானிய விலை நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்பில் சத்யபால் வசித்து வந்தார். இந்நிலையில் அரசு அனுமதியின்றி அவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டதற்காக அவருக்கு கடந்த 2013, ஜனவரியில் ரூ.48,420 அபராதம் விதிக்கப்பட்டது. பல நினைவூட்டல் கடிதங்களுக்கு பிறகும் அவர் இதை செலுத்தவில்லை.

இந்த நிலுவைத் தொகையை தேர்தல் ஆணையத்திடம் சத்யபால் சிங் மறைத்துவிட்டார். எனவே அவரது பதவியை பறிக்க வேண்டும்.

இவ்வாறு அனில் கல்கலி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in