

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம் கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 2,000 சர்வ தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சர்வ தரிசன டிக்கெட்டுக்களை பெற பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:
சர்வ தரிசன டோக்கன் பெற பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன்களை பெற்ற பக்தர்கள் மறுநாள் 26-ம் தேதி சுவாமியை தரிசிக்கலாம். இந்த டோக்கன்கள் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை வழங்கப்படும். 2 கரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பக்தர்கள் அல்லது கரோனா இல்லை எனும் சான்றிதழ் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
24-ம் தேதி முதல் ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் காலை 9 மணி அளவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.