

வணிக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் உறங்குவதைக் கண்டறியும் சென்சார் தொழில் நுட்பத்துக்கான கொள்கையை உருவாக்குவது அவசியம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வணிக வாகங்களை இயக்கும் ஓட்டுநர்களின் பணி நேரம் குறித்த முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்து கூறினார்.
அப்போது ஓட்டுநர்களின் உடல் மற்றும் மனச் சோர்வு காரணமாக ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்க, விமான ஓட்டுநர்களைப் போலவே லாரி, டிரக் போன்ற வணிக வாகன ஓட்டுநர்களுக்கான பணி நேரமும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் போது உறங்கினால் அதைக் கண்டறியும் சென்சார் தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதற்கான கொள்கைகளைவகுக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் 2020 நிலவரப்படி 90 லட்சம் டிரக், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக சரக்குப் போக்குவரத்து நடக்கிறது. 2018-ல் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான டிரக் ஓட்டுநர்கள் தூக்க குறைபாடு இருப்பதாகக் கூறியிருந்தார்கள். உடற்சோர்வு, தூக்கமின்மை, முதுகுவலி, மூட்டு மற்றும் கழுத்து வலி, பார்வை குறைபாடு, மூச்சுத் திணறல், மன அழுத்தம் மற்றும் தனிமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப் படுவதாக 53 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
விபத்து ஏற்பட வாய்ப்பு
இந்த நிலையில் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும். எனவே சாலைப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பகுதிகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு நிதின் கட்கரி அறிவுறுத்தினார்.
ஓட்டுநர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் சாலை அபாயங்கள் குறித்த மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் எச்சரிக்கை செய்வது தொடர் பாக ஐரோப்பிய யூனியன் சிஸ்டம் தொழில்நுட்பத்தை உருவாக்கி யுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ஓட்டுநரின் இமை அசைவு, ஸ்டியரிங்கைக் கையாளும் விதம் மற்றும் ஆக்சிலரேட்டர், பிரேக் உள்ளிட்டவையின் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்காணிக்கும். ஏதேனும் தவறான அசைவுகள், விபத்துக்கான அறிகுறிகள் தெரியும்பட்சத்தில் இந்த தொழில்நுட்பம் ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.