

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியா பூராவை சேர்ந்தவர் சந்துரு (30). தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்த 4-ம் தேதி தனது 4 வயது குழந்தையின் பிறந்த நாளையொட்டி அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அழைத்து சென்றார்.
அந்த கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி இல்லாததால் வெளியே நின்று வழிபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக 4 வயது குழந்தை கோயிலுக்குள் ஓடியுள்ளது.
அதை பார்த்த அர்ச்சகர் கனகப்பா பூஜாரி, தலித் குழந்தை நுழைந்ததால் கோயில் தீட்டாகி விட்டதாக ஊர் பஞ்சாயத்து குழுவைச் சேர்ந்த ஹனுமா கவுடா, விருப்பாக்ஷா கவுடா உள் ளிட்டோரிடம் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, கோயிலை தூய்மைப்படுத்த ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த சந்துருவுக்கு ஊர் பஞ்சாயத்து உத்தரவிட்டது.
இதுகுறித்து சந்துரு புகார் அளித்தும் போலீஸார் ஏற்கவில்லை. இந்த தகவல் தலித் சங்கர்ஷ சமிதிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, சமிதியின் கொப்பல் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமை கோரி கடந்த 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சமூக நல ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
விசாரணைக்குப் பிறகு கனகப்பா பூஜாரி, ஹனுமா கவுடா, விருப்பாக்ஷா கவுடா உள்ளிட்ட 12 பேர் மீது எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கனகப்பா பூஜாரி, ஹனுமா கவுடா உள்ளிட்ட 5 பேரை நேற்று கைது செய்தனர்.