

சபரிமலையில் குடிநீர் பாட்டில்கள் உட்பட எந்தவொரு வடிவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும் ஆண்டுதோறும் பக்தர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளும் சபரிமலை வனப்பகுதிகளில் மலைப் போல் குவிந்து வருவதால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை விவகாரம் குறித்து கவனித்து வரும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தோட்டதில் பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அனு சிவராமன் அடங்கிய அமர்வு, ‘‘சன்னிதானம், பம்பா, நிலக்கல் உட்பட சபரிமலையின் எந்தவொரு பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. குடிநீர் பாட்டில்கள் உட்பட எந்தவொரு வடிவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் சபரிமலைக்குள் நுழையவும் அனு மதிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
பக்தர்கள் சுமந்து வரும் இருமுடியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவதற்கு கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.