Published : 22 Sep 2021 04:06 PM
Last Updated : 22 Sep 2021 04:06 PM

தலிபான்களுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்: இந்தியா எதிர்ப்பால் சார்க் மாநாடு ரத்து

கோப்புப் படம்.

புதுடெல்லி

ஆப்கானிஸ்தான் சார்பாக தலிபான்கள் பங்கேற்பை பாகிஸ்தான் வலியுறுத்தியதால் இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் எதிர்ப்பு
தெரிவித்ததை அடுத்து சார்க் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது.

வரும் 25 ஆம் தேதி நடைபெற விருந்த சார்க் மாநாட்டில் தலிபான்களும் பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் முன் மொழிந்தது. இதற்கு இந்தியா உள்ளிட்ட சில உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அரசுகளிடையே உருவான கூட்டமைப்பான சார்க்கில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசியாவைச் சேர்ந்த 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

1985-ல் தொடங்கப்பட்ட சார்க் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு உலக நாடுகள் உட்பட பலதரப்பு நிறுவனங்களுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளது. வருடாந்திர ஐ.நா.பொதுச்சபை அமர்வின் போது பாரம்பரியமாக நடைபெறும் சார்க் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமும் நடைபெறுவது வழக்கம்.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம். சனிக்கிழமை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உச்சிமாநாட்டில் ஆப்கன் சார்பாக தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என்ற பாகிஸ்தான்
ஒரு கோரிக்கையை முன்மொழிந்தது.

பாகிஸ்தானின் இந்த திட்டத்திற்கு இந்தியாவும் வேறு சில உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததால் சார்க் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு சார்க் மாநாட்டில்....

கடந்த ஆண்டு மெய்நிகர் சார்க் வெளியுறவு அமைச்சர்கள் முறைசாரா கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆற்றிய உரையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், இணைப்பைத் தடுப்பது மற்றும் வர்த்தகத்தில் தடைகள், பாகிஸ்தானின் தெளிவான விமர்சனம் ஆகிய மூன்று முக்கிய சவால்களை சார்க் கடக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் பங்கேற்றார்.

அப்போது, ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பின் 370 -வது பிரிவை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததில் இருந்து இந்தியா -பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதற்குபதிலடியாக, ''370 வது பிரிவை நீக்குவது அதன் உள்நாட்டு விவகாரம்'' என்று சர்வதேச சமூகத்திற்கு இந்தியா திட்டவட்டமாக கூறியது.

பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் இஸ்லாமாபாத்துடன் சாதாரண அண்டை உறவுகளை விரும்புவதாகவும் பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும் அப்போது இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x