

எனது அமெரிக்க பயணம் அமெரிக்காவுடனான விரிவான உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்த முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி செப்டம்பர் 24 அன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்திக்க உள்ளார். ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்.
குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
குவாட் மாநாட்டில் கரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். முக்கியமான ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முக்கிய விவாதம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி 25-ம் தேதி ஐ.நா.பொதுசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கா புறப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தனது பயணம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"எனது அமெரிக்க பயணம் அமெரிக்காவுடனான விரிவான உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்த முடியும். முக்கிய கூட்டணி நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை வலுப்படுத்தவும், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும் ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான நமது பார்வை அடிப்படையில் பிரச்சினைகளை அணுகுவோம். எதிர்கால திட்டத்தில் முன்னுரிமைகளை அடையாளம் காண குவாட் உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும்’’ எனக் கூறினார்.