

கேரள லாட்டரியின் ரூ.12 கோடி பரிசுக்குரியவர் ஆட்டோ ஓட்டுநர் என தெரியவந்துள்ளது.
ஓணம் பம்பர் லாட்டரி முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளி யானது. இதில் ரூ.12 கோடி முதல் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என தெரியவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், வயநாடைச் சேர்ந்தவரும் துபாயில் வேலை செய்து வருபவருமான சையது அலாவி இந்த பரிசுக்கு உரிமை கோரினார். இதையடுத்து அவரதுகுடும்பத்தினரை சந்தித்து ஊடகங்கள் பேட்டி எடுத்தன. ஆனால் பரிசுக்குரிய டிக்கெட் தனது நண்பரிடம் இருப்பதாகவும் விரைவில் அவர் தனது குடும்பத்தினரிடம் டிக்கெட்டை தருவார் என்றும் அலாவி தெரிவித்தார்.
இதனிடையே, கொச்சியை அடுத்த மராடு நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பி.ஆர்.ஜெயபாலன்தான் உண்மையான அதிர்ஷ்டசாலி என நேற்று அடையாளம் காணப்பட்டார். அவர் ரூ.300-க்கு வாங்கிய அந்த டிக்கெட்டை (டிஇ 645465) கொச்சியில் உள்ள வங்கியில் சமர்ப்பித்து அதற்குரிய சான்றிதழை பெற்றார். இதன்மூலம் அவருக்கு வரிப்பிடித்தம் போக சுமார் ரூ.7 கோடி கிடைக்கும்.
இதுகுறித்து ஜெயபாலன் கூறும்போது, “கடந்த 10-ம் தேதி திருப்புனித்துராவில் இந்த டிக்கெட்டை வாங்கினேன். இந்த டிக்கெட்டில் இருந்தது ராசியான எண் என நான் கருதினேன்” என்றார்.- பிடிஐ