

ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் வந்த ரூ.20,900 கோடி போதைப்பொருள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத் தில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான அவரது கணவரைபோலீஸார் தேடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்துகப்பல் மூலமாக 2 கன்டெய்னர்களில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த வாரம், குஜராத்தின் முந்தரா துறைமுகத்தில் குறிப்பிட்ட படகைஅதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் ரூ.20,900 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இந்த ஹெராயின் பெட்டிகள் மீது ஆஷி டிரேடிங் கம்பெனி, சத்தியநாராயணபுரம், விஜயவாடா என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த முகவரியில் ஆய்வுசெய்ய டிஆர்ஐ அதிகாரிகள் விஜயவாடா வந்தனர். உள்ளூர் போலீஸார் உதவியுடன் அந்த முகவரியில் ஆய்வு செய்தபோது, பூட்டப்பட்டிருந்த சிறிய மஞ்சள் நிற வீட்டை மட்டுமே அதிகாரிகளால் பார்க்க முடிந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் முகப்பவுடர் கம்பனி நடத்துவதாக கூறிவரும் அந்த மஞ்சள் வீட்டுக்காரர்கள் காக்கிநாடாவை சேர்ந்த சுதாகர் அவரது மனைவி துர்கா பூர்ணா வைஷாலி எனவும் இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருவதாகவும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த தம்பதியரை பிடிக்க போலீஸார் சென்னை விரைந்தனர். சுமார் ரூ.20,900 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை, முகத்துக்கு பூசும் பவுடர் என்று கூறி, ஆப்கானிஸ்தானில் இருந்து வரவழைத்துள்ள இவர்களைப் பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வைஷாலி பெயரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உரிமம் இருப்பதும் கடந்த 2020 ஆகஸ்ட் 18-ம் தேதி இவர்கள் ஜிஎஸ்டி பதிவுகூட பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
சென்னை, கொளப்பாக்கம் பகுதியில் இந்த தம்பதியினர் கடந்த 8 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். வைஷாலியை டிஆர்ஐ அதிகாரிகள் கைதுசெய்து விட்டதாகவும் அவரது கணவர் சுதாகரை தேடி வருவதாகவும் விஜயவாடா போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆப்கானிஸ்தான் பிரஜைகளின் பங்கு ஆராயப்படுகிறது. டெல்லி, சென்னை மற்றும் குஜராத்தில் சோதனை நடத்தப்படுகின்றன. தொடர்ந்து மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என டிஆர்ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.