Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

கர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை அமைச்சர் தகவல்

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பாஜக எம்எல்ஏ கூலிஹட்டி சேகர், ‘‘இந்துக்கள் அதிகளவில் மதம் மாற்றப்படுகிறார்கள். திரு மணத்துக்காகவும் இத்தகைய மதமாற்றம் நடைபெறுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ‘‘கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கு விரைவில் தனிச்சட்டம்கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அதிகளவில் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனது தொகுதியில் தலித் மக்களும் பழங்குடிகளும் அதிகஅளவில் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனது தாயாரே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார்.அவரை கிறிஸ்தவர் மூளை சலவை செய்ததால் இப்போது எத்தகைய அணிகலனையும் அவர் அணிவதில்லை. நெற்றியில் பொட்டு கூட வைப்பதில்லை. தன் செல்போன் ரிங் டோனாக கிறிஸ்தவ பாடலையே வைத்திருக்கிறார்'' என்றார்.

அதற்கு பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வரா ஹெக்டே ககேரி,‘‘அத்தகைய சட்டம் கொண்டுவரும் திட்டம் இருந்தால் உள்துறை அமைச்சர் வெளிமாநிலங் களில் அமலில் உள்ள அந்த சட்ட பிரிவுக‌ளை ஆராய்ந்து, இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும்'' என்றார்.

இதனிடையே, கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் அசோக்,குளிர்கால கூட்டத்தொடரில் ‘மதகட்டமைப்பு பாதுகாப்பு சட்ட மசோதா 2021'ஐ நேற்று அறிமுகப்படுத்தினார். அப்போது அசோக், ‘‘அனைத்து மதங்களை சேர்ந்த வழிபாட்டு மையங்கள், அதன் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்த புதிய மசோதாவின் மூலம் கர்நாடகாவில் உள்ள அனைத்து மதங்களின் கட்டமைப்பு பாதுகாக்கப்படுவதுடன், சுதந்திரமாக இயங்க வழிவகை செய்யப்படும். அதேபோல‌ பொது இடங்களில் சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்களை அமைப்பதும் தடுக்கப் படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x