Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி.(கோப்பு படம்)

புதுடெல்லி

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறார்.

ஐ.நா. பொது சபை கூட்டம்நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவும் செல்கின்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று கரோனா பரவல் தடுப்பு தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து ஜப்பான்பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை அவர் நாளை சந்தித்துப் பேசுகிறார்.

அன்றைய தினம் அமெரிக்க தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இதில்ஆப்பிள் நிறுவன தலைமை செயல்அதிகாரி டிக் குக்கும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுப்பார்.

இதேநாளில் அமெரிக்க அதிபர்ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசுகிறார்.

தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றபோது பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு இரு தலைவர்களும் பல்வேறு முறை தொலைபேசியில் பேசியுள்ளனர். தற்போது முதல்முறையாக இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் பெறுகிறது.

குவாட் மாநாடு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள்இணைந்து குவாட் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சர்வதேச அரங்கில் சீனாவை எதிர்கொள்ள இந்த கூட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நாளை மறுதினம் குவாட் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் தீவிரவாத ஒழிப்பு, பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடிநாளை மறுதினம் அதிகாரப்பூர்வமாக சந்திக்கிறார். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவரை, பிரதமர்மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்தும் அதிபர் பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அந்த நாடு முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போதைய தலிபான் அரசுடனான அணுகுமுறை குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

ஐ.நா. பொது சபை கூட்டம்

வரும் 25-ம் தேதி நியூயார்க் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொது சபை கூட்டத்தில்பங்கேற்று பேசுகிறார். அன்றைய தினமே அவர் டெல்லி திரும்புகிறார்.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: கரோனாவில் இருந்து மீள்வது, பருவநிலை மாறுபாடு, மக்களின் அடிப்படை உரிமைகள், ஐ.நா. சபையை புதுப்பிப்பதுஆகிய கருத்துகளின் அடிப்படையில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில்தலைவர்கள் பேச உள்ளனர். அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுவதை உலக தலைவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறனர்.

வளரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. பருவநிலை மாறுபாடு, அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வது, தீவிரவாதத்துக்கு எதிரான போர், பொருளாதார மீட்சி ஆகியவற்றில் உலகநாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x