

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் நேற்று கூறியதாவது:
ராணுவம் தொடர்பான ரகசியதகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த நபரை பிடிக்கஎனது தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு காட்டன் பேட்டையைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங் (32) என்பவரை குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை மாலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த அவர் ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்கள், புகைப்படங்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு அனுப்பியது கண்டறியப்பட்டது.
இரு மாதங்களுக்கு முன் பெங்களூரு வந்த அவர், துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டே இந்த சதி வேலையிலும் ஈடுபட்டுள்ளார். ராணுவ கமாண்டர் உடை அணிந்து கொண்டு ராஜஸ்தான் எல்லையில் உள்ள ராணுவநிலையத்தின் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் அந்நாட்டு அதிகாரிகளுடன் வீடியோ அழைப்பில் அவர் பேசியதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஜிதேந்தர் சிங்கை தென்மண்டல ராணுவஅதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். அதே வேளையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.