கெயில் பைப்லைன் விபத்து: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு

கெயில் பைப்லைன் விபத்து: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி நகரத்தில், 15 பேரை பலி கொண்ட கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணை நடத்த, உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மீட்பு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.

மேலும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைக்க அவர் உத்தரவிட்டார்.

மத்திய இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் இக்குழுவினை தலைமை ஏற்று விசாரனை நடத்துவார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதியும் இடம்பெறுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விபத்து இடத்தில் நடந்துவரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நேரில் பார்வையிட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர், மத்திய பிரதேச முதலமைச்சர், பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலர், கெயில் நிறுவனத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in