

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் உள்ளூர் மக்களுக்கு தனியார் துறையில் 80 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரமாக பல்வேறு தலைவர்களை களமிறங்கி பணியைத் தொடங்கிவிட்டது. கோவாவில் தீவிரமாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மியும் தேர்தலில் தீவிர பணியாற்றி வருகிறது.
இந்தநிலையில் பனாஜியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
கோவா மாநிலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று வேலையின்மை ஆகும். கரோனா காலத்தில் மக்களின் துயரத்தை அதிகரித்துள்ளது. கரோனா மக்களை வேலையில்லாமல் ஆக்கியுள்ளது.
மக்கள் திவாலாகி விட்டனர். பல ஆண்டுகளாக, கோவாவில் சுரங்கம் இல்லை, அந்த முன்னணியிலும் வேலையின்மை இருந்தது. பல இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நாம் இங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உங்களுக்கு நல்ல எண்ணம் கொண்ட நேர்மையான அரசு தேவை.
சுற்றுலாவைச் சார்ந்துள்ள குடும்பங்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ₹ 5,000 வழங்கப்படும். அதேபோல, சுரங்கத்தை சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கும் ₹ 5,000 மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும்.
கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், கோவா மக்களுக்கு 80 சதவீத தனியார் துறை வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வேலை வழங்கப்படும். வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்