

உத்தரப் பிரதேசத்தில் அகில் பார்திய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி மர்மமாக மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் உள்ள பாகம்பரி மடத்தைச் சேர்ந்த அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி மர்மான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரின் உடலை மீட்ட போலீஸார் இது தற்கொலையா என்றும் விசாரித்து வருகின்றனர்.
அவரின் அறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடிதத்தில், மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனக்குப் பின் மடத்தில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில் பார்திய அகாரா பரிஷத் என்பது துறவிகளின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பாகும். மகந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “மகந்த் நரேந்திர கிரி மரணத்துக்குக் காரணமாகத் தற்கொலை எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரின் சீடர்கள், பின்பற்றுவோர் ஆகியோர் தற்கொலை அல்ல, கொலை எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் யாரோ சிலர் இந்துத்துவாவின் குரல்வளையை நெரித்துவிட்டார்கள். மகந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மகாரஷ்டிராவின் பால்கரில் துறவிகள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மகாவிகாஸ் அகாதி அரசு எவ்வாறு விசாரணை நடத்தியதோ அதேபோன்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பால்கரில் இரு சாதுக்களை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தில் இந்துத்துவா தாக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. தற்போது என்ன சொல்லப்போகிறது? கும்பமேளா திருவிழா நடத்தியதில் மகந்த் நரேந்திர கிரிக்கு முக்கியப் பங்கு உண்டு. ராமர் கோயில் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார். இந்துத்துவா அமைப்பு என்பதால், மகந்த் நரேந்திர கிரியிடம் இருந்து சிவசேனா கட்சி பலமுறை ஆசிகளைப் பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார்.
உ.பி. காவல்துறை ஐஜி கே.பி.சிங் கூறுகையில், “மகந்த் நரேந்திர கிரியின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. 7 முதல் 8 பக்கங்களில் அவர் அறையிலிருந்து கடிதம் மீட்கப்பட்டது. தான் மனரீதியாக வேதனை அடைந்துள்ளதால், வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். தன்னுடைய சீடர்களில் ஒருவரால் மிகவும் மனவேதனை அடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்” எனக் குறிப்பிட்டார்.