

உ.பி.யின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஹனுமார் கோயிலில் சம்பல் கொள்ளையன் தத்துவாவுக்கு நேற்று முன்தினம் சிலை வைக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணம் என்று அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம் தற்போது எதிர்ப்பை கைவிட்டுள்ளது.
சம்பல் கொள்ளையர்களில் முக்கியமானவர் தத்துவா என்கிற சிவக்குமார் பட்டேல் உ.பியின் வீரப்பன் என்று அழைக்கப்பட் டவர். இவர் கடந்த 2007-ம் ஆண்டு, ஜூலை 21-ம் தேதி, உ.பி.யின் சித்திரகூட் பகுதியில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தத்துவா உயிருடன் இருந்தவரை சம்பல்வாசிகளுக்கு பல்வேறு நன்மைகள் செய்துள்ளார். இத னால் இப்பகுதியில் இவருக்கு தனிப் பட்ட செல்வாக்கு ஏற்பட்டது. உ.பி. யின் அரசியல் மற்றும் தேர்தல் களிலும் இந்த செல்வாக்கு பயன் படுத்தப்பட்டது. அவர் மறைந்த பின்னும் இந்த செல்வாக்கு நிலைத் திருக்கும் வகையில் அவரது சிலையை பதேபூர் மாவட்டம், கப்ரஹா கிராமத்தில் உள்ள ஹனுமார் கோயிலில் வைக்க திட்ட மிடப்பட்டது. தத்துவாவின் மகனும் எம்எல்ஏ.வுமான வீர்சிங் பட்டேல், சகோதரனும் மீர்சாபூர் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான பாலகுமார் பட்டேல், இவரது மகன் ராம்சிங் பட்டேல் ஆகியோர் இதற்கான முயற்சி மேற்கொண்டனர். இவர்கள் மூவருமே உ.பி.யின் ஆளும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள்.
கொள்ளையனுக்கு சிலை வைப்பது சமூகத்தில் தவறான உதாரணத்தை ஏற்படுத்தும் என பதேபூர் மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்க மறுத்தது. இதுகுறித்த விரிவான செய்தி கடந்த பிப்ரவரி 6-ல் ‘தி இந்து’வில் வெளியானது. இந்நிலையில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத் தில்கொண்டு கடைசி நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து கப்ரஹா கிராமத் தில் ஹனுமார் கோயிலில் தத்துவா, அவரது மனைவி கேத்கி ஆகியோரின் சிலைகள் நேற்று முன்தினம் வைக்கப்பட்டன. முன்னதாக தத்துவாவின் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் பிறகு நடந்த விருந்தில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் தம்பியும் பொதுப் பணித் துறை அமைச்சரு மான ஷிவ்பால்சிங் யாதவ் கலந்து கொள்வதாக இருந்து கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக மாநில பால் வளத்துறை அமைச்சர் ராம்மூர்த்தி வர்மா கலந்துகொண்டார். 11 நாட்களாக நடைபெற்ற இந்த விழாவில் சிலை வைத்தது உட்பட ரூ.3 கோடி செலவிடப்பட்டதாக கூறப் படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் தத்துவாவின் மகன் வீர்சிங் பட்டேல் எம்எல்ஏ கூறும்போது, “சொந்த நிலத்தில் என் தந்தையால் கட்டப்பட்ட கோயிலில் அவரது சிலை வைக்க அரசிடம் அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை. என் தந்தை உயிருடன் இருந்த வரை இப்பகுதி மக்களுக்கு பல நற்பணிகள் செய்துள்ளார். சம்பல்வாசிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றவே அவருக்கு சிலை வைக்கப்பட் டுள்ளது. அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அல்ல” என்றார்.
உ.பி., ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் புந்தேல்கண்ட் பகுதியில் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
முன்னாள் கொள்ளைக்காரி பூலான்தேவியால் இப்பகுதி பிரபலமானது. இங்கு அதிகமாக வாழும் குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் தத்துவா. இவரைப் போல மற்றொரு சம்பல் கொள்ளையன் மொஹர்சிங்குக்கு பல ஆண்டுகளுக்கு முன் ஆக்ராவிலுள்ள கிராமத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.