ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பு: 3 டன் ஆப்கானிஸ்தான் ஹெராயின் போதைப்பொருள் குஜராத்தில் பிடிபட்டது

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட 3 டன் எடை கொண்ட ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் குஜராத்தில் பிடிபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பிடிபட்ட போதைப் பொருட்களில் அதிக மதிப்பு வாய்ந்தவை தற்போது பிடிபட்ட ஹெராயின் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இருவரை வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் வட்டாரங்கள் கூறுகையில், “முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இரு கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு கன்டெய்னரில் 2 டன் ஹெராயின் போதைப் பொருளும், மற்றொரு கன்டெய்னரில் ஆயிரம் கிலோவும் இருந்தது. இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றப்பட்டுள்ளன.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த இரு கன்டெய்னர்களிலும் உள்ள ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.19,900 கோடி இருக்கும். இந்தக் கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை ஆப்கனைச் சேர்ந்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தனர்.

உலக அளவில் ஹெராயின் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். உலக அளவில் 80 முதல் 90 சதவீத உற்பத்தி இங்கிருந்து நடக்கிறது. ஆப்கானிஸ்தான் சமீபத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், ஹெராயின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in