

பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் உபர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுமான ராஜீவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஸ்புக் இந்தியாவின் புதிய பொதுக் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் அகர்வால், பயனாளர்களின் பாதுகாப்பு,தரவு பாதுகாப்பு, தனியுரிமை, இணைய நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கைகளை வரையறுத்து பேஸ்புக் நிறுவனத்தின் மேம்பாட்டு முயற்சிகளை வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ராஜீவ் அகர்வால், பேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகனிடம் அறிக்கை அளிப்பார் என்றும், இந்திய தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் இருப்பார் என்றும் கூறியுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் அகர்வால் இந்திய நிர்வாகப் பணியில் 26 வருட அனுபவம் உள்ளவர். இந்தக் காலத்தில் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராக இருந்து இந்தியாவின் முதல் அறிவுசார் சொத்து காப்புரிமை தொடர்பான தேசிய கொள்கையைக் கொண்டு வந்தவர் ஆவார். - பிடிஐ