

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் கரோனா பரவல் காரணமாக சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களும், விஐபி பிரேக் தரிசனம் மூலமும், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்றவர்களும் வழக்கம் போல் சுவாமியை தரிசித்தனர்.
இதனால், இலவசமாக ஏழு மலையானை சாமானிய பக்தர்கள் தரிசிக்க இயலாமல் போனது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சுமார் 4 மாதங்கள் கழித்து சோதனை அடிப்படையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்தர்களுக்கு மட்டும் சர்வ தரிசன முறையை மீண்டும் திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தியது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால், வழக்கம் போல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனால், நேற்று முதல் தினமும் 8 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் தீர்மானித்தது. புரட்டாசி மாதம் என்பதால், இதனை அறிந்த பக்தர்கள் தற்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இரவு முதலே திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடர்கிறது.
தினமும் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே தர்ம தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதி முறைகளை கண்டிப்பாகஅனை வரும் கடைபிடிக்க வேண்டு மெனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.