

அரசுப் பணத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை ஊக்கு விப்பதால் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:
மதச்சார்பின்மையின் அடிப் படை கோட்பாடுகளை மீறி விநாயகர் சதுர்த்தி பூஜையை டி.வி. சேனல்களில் ஆம் ஆத்மி அரசு ஊக்குவித்து வருகிறது. பூஜையில் பங்கேற்றுமாறு மக்களை அழைக்கிறது. அரசு நிதியை பயன்படுத்தி மத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதும் டி.வி. சேனல்களுக்கு நேரடி ஒளிபரப்பு மற்றும் விளம்பரங்களுக்கு கட்டணம் செலுத்துவதும் நம்பிக்கை மீறல் குற்றமாகும்.
இதனை இந்திய தண்டனைச் சட்டத்தின் 408 மற்றும் 420-வது பிரிவின் கீழ் சட்டவிரோதம், அரசியல் சாசன விரோதம் மற்றும் தன்னிச்சையான செயல் என அறிவிக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29(ஏ)(5) பிரிவை மீறியதற்காக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் கேபினட் அமைச்சர்கள் அரசியல் சாசன பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு எம்.எல்.சர்மா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.என்.படேல், அமித் பன்சால் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் தேர்தல் ஆணையம் நவம்பர் 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதி பதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ