தெலங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

தெலங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்
Updated on
1 min read

நாட்டின் 29-வது மாநிலமாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தின் முதல், முதல்வராக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் (டி.ஆர். எஸ்) தலைவர் கே.சந்திரசேகர ராவ் இன்று காலை பதவி ஏற்றார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலங்கானாவில் உள்ள 119 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 63 தொகுதிகளை டி.ஆர். எஸ்கட்சி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்குமாறு சந்திரசேகர ராவுக்கு ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் இன்று (ஜூன் 2) அதிகாரப்பூர்வமாக பிரிந்தது. மாநிலத்தின் முதல்வராக கே. சந்திர சேகர் ராவ் காலை 8.15 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். இவருடன் 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஆளுநர் இ.எஸ்.எல் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் 9 மணியளவில் மாநிலம் உதயமானதையொட்டி அரசு சார்பில் விழா நடைபெற்றது. மதியம் 12.57 மணிக்கு தலைமைச் செயலகத்தில், தெலங்கானா மாநிலத்தின் புதிய முத்திரை அங்கீகாரத்திற்காக கையொப்பமிடுகிறார்.

பின்னர், மாநில பிரிவினைக்காக உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் மற்றும் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கும் கோப்பில் கையெழுத்திடுகிறார்.

பிரதமருக்கு அழைப்பில்லை

சந்திரசேகர ராவின் பதவி ஏற்பு விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட எந்த மத்திய அமைச்சருக்கும் டி.ஆர்.எஸ் கட்சி அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் சந்திர சேகர ராவ் கூறுகையில் “நான் தற்போது எந்த பதவியிலும் இல்லை. மேலும் புதிய மாநிலத்தில் இதுவரை மாநில டி.ஜி.பி மற்றும் முதன்மை செயலாளர்கள் போன்ற முக்கிய உயர் அதிகாரிகளை நியமனம் செய்யவில்லை. இன்னமும் 15 நாட்களில் மாநிலம் உருவானதற்கான விழா அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கு பிரதமர் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்றார்.

சமீபத்தில் கம்மம் மாவட்டத்தில் போலாவரம் அணைக்கட்டு கட்டும் இடத்தின் கீழ் மட்டத்தில் உள்ள 7 மண்டலங்கள் சீமாந்திராவுடன் இணைக்கப்பட்டன. இதுவே, மோடியை சந்திரசேகர ராவ் அழைக்காததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதே போன்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் இவர் நேரடியாக அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா மாநிலம் இன்று உதயமானதால், புதிய அரசு பொறுப்பேற்கிறது. இதனால், தெலங்கானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்தாகிறது. சீமாந்திராவில், வரும் 8-ம் தேதி தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in