

இலங்கை மீதான மனித உரிமை மீறல் புகார்கள், போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தும் என அதன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் மீது வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட உள்ள நிலையில் அது பற்றிய தனது நிலையை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவம் நிகழ்த்தியதாக கூறப்படும் அத்துமீறல், மனித உரிமை மீறல் புகார்கள் பற்றி நம்பிக்கை தரக்கூடிய வகையிலும் நடுநிலைமையோடும் காலவரை நிர்ணயித்து விசாரணை நடத்துவதை உறுதி செய்ய பிற நாடுகளுடன் இணைந்து இலங்கையை நிர்ப்பந்திக்க முயற்சி செய்வோம் எனவும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.
விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்த அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகளை வெளிப்படையாக தம் பக்கம் ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அமைந்துள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக இடம்பெற்றுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டதாக தமிழ் பேசும் மக்களும் இதர சிறுபான்மையினரும் சம அந்தஸ்து, சம உரிமைகள் பெறுவதை உறுதி செய்ய இலங்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். ஆட்சியில் அமர்ந்தால் மாகாணங்களுக்கு குறிப்பாக, தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு மாகாணத் துக்கு அதிகாரம் கிடைக்கவும் வடக்கு, கிழக்கில் சுயாட்சி அதிகாரமிக்க மாகாணங்கள் உருவாக்கவும் வலியுறுத்தப்படும்.
தமிழ் பேசும் மக்களும் சிறுபான் மையினத்தவரும் கண்ணியமான வழியில் தமது வாழ்க்கையை புதிதாக நிர்மாணிக்க மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை கட்சி வழங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகளின் உணர்வுகளுக்கு இணங்கியே, கடந்த இரு ஆண்டுகளில் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாக்களித்தது என்றும் தமது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.