

அகில் பார்திய அகாரா பரிஷத்தின் (ஏபிஏபி) தலைவர் மகந்த் நரேந்திர கிரி மர்மமான முறையில் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ளா பாகம்பரி மடத்தில் இருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அங்கு தடயவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், மகந்த் நரேந்திர கிரியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆன்மிக உலகுக்குகும் பேரிழப்பு. மறைந்த நரேந்திர கிரியின் ஆன்மா ஸ்ரீராமரின் பொற்பாதங்களில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய வழித் தொண்டர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கு சக்தியை இறைவன் அருள பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் பல்வேறு சன்த் சமாஜங்களுக்கும் இடையே இணைப்புப் பாலத்தை உருவாக்கியவர். இறைவன் அவரது பொற்பாதத்தில் மகந்த் நரேந்திர கிரிக்கு இடம் தருவாராக. ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
அகில் பார்திய அகாரா பரிஷத் என்பது துறவிகளின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பாகும்.
தற்கொலையா என ஆய்வு:
மகந்த் நரேந்திர கிரியின் உடல் அவரது அறையில் இருந்து தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டதால் இது தற்கொலையா என்றும் போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும், அறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடிதத்தில், மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது மறைவுக்குப் பின்னர் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தற்கொலைக் குறிப்பாகக் கருதினாலும் கூட போலீஸார் தடயங்களின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.