

கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு கட்டாயப்படுத்துவதற்கு சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அவர் தனது பிரிட்டன் பயணத்தையும் ரத்து செய்துள்ளார். பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் தி பேட்டில் ஆஃப் பிலாங்கிங் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால், தடுப்பூசி விவகாரத்தால் அவர் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் பிரிட்டனுக்கு வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளச் சொல்வது காயப்படுத்தும் செயல் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெய்ராம் ரமேஷும் பிரிட்டனுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய டீவீட்டில் பிரிட்டனுடன் இணைந்தே சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. ஆனால், பிரிட்டன் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் எனக் கூறுகிறது. இது நிச்சயமாக ஒருவகை இனவெறிச் செயல் என்று சாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் பேசி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.
இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா, போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுகின்றனர்.
காரணம் உலக சுகாதார அமைப்பானது, ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்காக அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.