Published : 20 Sep 2021 01:32 PM
Last Updated : 20 Sep 2021 01:32 PM

முதல் தலித் சீக்கியர்: பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு

பஞ்சாபில் தலித் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைமை உத்தரவையேற்று அமரீந்தர் சிங் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் புதிய முதல்வர் சீக்கியராக இருக்க வேண்டும் என்று கூறி தனக்கு அளித்த வாய்ப்பை அம்பிகா சோனி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதனையடுத்து பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவின் பெயரை அடுத்த முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் பஞ்சாப் காங்கிரஸ் முக்கியத் தலைவரான சரண்ஜித் சிங் சன்னிக்குக் கட்சி உறுப்பினர்களிடையே ஒருமித்த ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து அவர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அமரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்தவர் சரண்ஜித். தலித் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதுபோலவே இரண்டு துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

அதன்படி, இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் ரந்தவா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்கள் துணை முதல்வராக பதவி வகிப்பர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்துக்கள். பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக பஞ்சாப் அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x