Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம்?- உலக சுகாதார அமைப்பு அக். 6-ம் தேதி முடிவு

கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வரும் அக்டோபர் 6-ம் தேதி முடிவு எடுக்கிறது.

அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிகா (கோவிஷீல்டு), சீனாவின் சினோபார்ம், சினோவாக் உள்ளிட்ட கரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தியாவில் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 6 கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பிரிட்டன்-சுவீடன் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்திசெய்யப்பட்டு அதிக அளவில்பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இதேபோல ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கரோனா தடுப்பூசியும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்புஇன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. இதன் காரணமாக இந்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வெளிநாடு செல்லும்போது சில சிரமங்களை சந்திக்கின்றனர்.

இந்த பின்னணியில் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் உயர்நிலை கூட்டம் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 16-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தால் மேலும் பல்வேறு நாடுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும்.

மாநிலங்களுக்கு 76 கோடி தடுப்பூசி

மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு விரைவில் 1.16 கோடி கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 75.58 கோடி கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளிடம் தற்போது 5.16 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. விரைவில் மாநிலங்களுக்கு 1.16 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் அனுப்பப்படுகிறது என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை திறம்பட செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கடந்த 17-ம் தேதி 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 18-ம் தேதி 85.42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 80.43 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப் பட்டிருக்கிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x