

பஞ்சாபில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய தீவிரவாதியை போலீஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதி ஃபாஸிகா மாவட்டம். இங்குள்ள ஜலாலாபாத் நகரில் கடந்த 15-ம் தேதி மோட்டார் சைக்கிள் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பல்வீந்தர் சிங் (22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது, அதே மாவட்டத்தில் உள்ள தரும்புரா கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் குமார் (33) என்பவரே அந்த மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், பல்வீந்தர் சிங் வழக்கமாக அங்குள்ள பூங்காவுக்கு செல்வார் என்பதால் அவரது மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்ததாக பர்வீன் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், அன்றைய தினம் பல்வீந்தர் சிங் பூங்காவுக்கு செல்லாததால் அதிக அளவிலான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
பர்வீன் குமார், பாகிஸ்தானில் செயல்படும் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.