

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை, மின்னணு ஏலத்தில் விடும் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் நடத்துகிறது.
இந்த நினைவுப் பரிசுகளில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ருத்ராக்ஷ் மாநாட்டு மையம் ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளன.
இந்த மின்னணு-ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் / அமைப்புகள் https://pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் அக்டோபர் 7ம் தேதி வரை பங்கேற்க முடியும்.
இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படும்.
இந்தநிலையில் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் கூறியுள்ளதாவது:
“காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.