Published : 19 Sep 2021 01:57 PM
Last Updated : 19 Sep 2021 01:57 PM

‘‘பஞ்சாப் புதிய முதல்வர் சீக்கியர் தான்’’- அம்பிகா சோனி திட்டவட்டம்

புதுடெல்லி

பஞ்சாப் புதிய முதல்வர் சீக்கியராக இருக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு உள்ளது. தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக , கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

எனினும், முதல்வர் அமரீந்தரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருதரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அதன்பின், மாநில தலைவராக சித்து பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அமரீந்தர் பங்கேற்றார்.

இந்நிலையில் முதல்வர் அமரீந்தருக்கு எதிராகச் சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்துச் செயல்படுகிறார் என்று அதிருப்தி கட்சிக்குள் எழுந்தது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் பஞ்சாப் புதிய முதல்வர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனியை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை ஆலோசனை செய்தது.

அம்பிகா சோனி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேற்று இரவு நேர சந்தித்து பேசியதாக தெரிகிறது. அப்போது தனக்கு முதல்வர் பதவியில் விருப்பமில்லை என அம்பிகா சோனி கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘பஞ்சாபின் அடுத்த முதல்வர் ஆக வேண்டும் என்ற வாய்ப்பை கட்சித் தலைமை தந்தது. ஆனால் நான் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன் சண்டிகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

பொதுச் செயலாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைத்து எம்எல்ஏக்களின் கருத்தையும் எழுத்துப்பூர்வமாக பெறுகிறார்கள். அதன் பிறகு முடிவெடுக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எனது கருத்தை நான் விளக்கியபோது, அவர்கள் என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர். பஞ்சாப் காங்கிரஸின் முக்கிய முகம் அல்லது முதல்வர் சீக்கியராக இருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை, இன்றிலிருந்து அல்ல, கடந்த 50 ஆண்டுகளில் இருந்து இது நடைமுறையாக உள்ளது.

சீக்கியர்களை முதல்வராக்கும் ஒரே மாநிலம் இது தான். ஆனால் மாநிலத்தின் அடுத்த முதல்வராக வரக்கூடிய நபர் யார் என்று என்னால் கூற இயலாது’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x