

காங்கிரஸின் நலன் கருதி கேப்டன் அமரீந்தர் சிங் கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவார் என நம்புகிறேன், அவர் காங்கிரஸை காயப்படுத்த மாட்டார் என்று ராஜஸ்தான் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலோட் கூறியுள்ளார்.
பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு உள்ளது. இந்தநிலையில் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்தார்.
பின்னர் தனது ராஜினாமா குறித்து அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், "நான் கட்சியில் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் மீது ஏதோ ஐயப்பாடு கட்சிக்கு இருக்கிறது.
இது எனக்கு மிகப்பெரிய அவமானம். நான் இன்று காலையில் சோனியா காந்தியிடம் பேசும்போதே பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துவிட்டேன். இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். பஞ்சாப் காங்கிரஸில் உள்ள எனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பேன். அடுத்த முடிவை எடுப்பதற்கு முன்னர் அவர்களிடம் ஆலோசிப்பேன்" என்று கூறினார்.
இந்தநிலையில் ராஜஸ்தான் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலோட், அம்ரீந்தர் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் ஒன்பதரை வருடங்கள் முதல்வர் பொறுப்பை அளித்துள்ளதாகவும், பஞ்சாப் மக்களுக்கு மிகவும் நேர்மையாக சேவை செய்யும் தனது கடமையை நிறைவேற்றியதாகவும் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு கூறியுள்ளார்.
பல சமயங்களில், கட்சியின் நலன் கருதி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் கட்சி உயரதிகாரிகள் முடிவுகளை எடுக்க வேண்டும். முதல்வர் ஆவதற்கான போட்டியில் இருக்கும் பல தலைவர்களின் அதிருப்தியை எதிர்கொண்ட பின்னரே காங்கிரஸ் தலைவர் முதல்வரைத் தேர்வு செய்கிறார் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
ஆனால் அதே முதல்வரை மாற்றும் போது, அவர்கள் கட்சித் தலைமையின் முடிவால் வருத்தப்படுகிறார்கள். இதுபோன்ற தருணங்களில், அவர்களின் எண்ணங்களை கேட்க வேண்டும்.
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கும்படி அவர் எனக்கு அழுத்தம் கொடுத்தார். அதுபோலவே இளையவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
எனவே காங்கிரஸின் நலன் கருதி அவர் மனம் நொந்து போயிருப்பதாக நான் கருவில்லை. கேப்டன் அம்ந்தர் சிங் கட்சியின் மரியாதைக்குரிய தலைவர். காங்கிரஸின் நலன்களை மனதில் கொண்டு தொடர்ந்து அவர் கட்சியில் பணியாற்றுவார். காங்கிரஸை காயப்படுத்த மாட்டார் என்று நம்பிகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.