

நாடு முழுவதும் ஒரே நாளில் 2 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 390 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கட்சிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் கோவாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 42 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் 100 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசியில் சாதனை படைத்துவரும் கோவா மாநில சுகாதாரஊழியர்கள், தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
கோவாவில் 100% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கரோனாவுக்கு எதிரானபோராட்டத்தில் முக்கிய மைல்கல்ஆகும். இதற்கு காரணமான கரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். மற்ற மாநிலங்களுக்கு கோவா முன்னுதாரணமாக திகழ்கிறது.
பல பிறந்த நாட்களை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் 71-வதுபிறந்த நாள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக சுகாதார ஊழியர்கள் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல், நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் கடமை உணர்வால் என்னுடைய பிறந்தநாளில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், கோவா, சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் 100 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கோவா மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மருத்துவர் நிதின் துப்தாலே உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அவரிடம் பிரதமர் மோடி கூறும்போது, "நான் மருத்துவரோ. சுகாதாரத் துறை நிபுணரோ கிடையாது. சில நூறு பேருக்கு கரோனா தடுப்பூசி போடும்போது ஒருவர் அல்லது இருவருக்கு காய்ச்சல் ஏற்படுவதை செவிவழியாக அறிந்திருக்கிறேன்.
கடந்த 17-ம் தேதி 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது ஒரு உலக சாதனையாகும். அன்றிரவு தடுப்பூசி எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியான போது ஒரு கட்சிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது" என்று தெரி வித்தார்.
சமூக ஆர்வலர் நசீர் ஷேக், ஸ்வீமா பெர்னாண்டஸ், சசிகாந்த் பகவத், ஸ்வீட்டி வெங்குர்லேக்கர், சுமேரா கான் ஆகியோருடனும் பிரதமர் நரேந்திர மோடி கலந் துரையாடினார்.
காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளி யிட்ட பதிவில், ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதுபோல் மேலும் பல நாட்கள் வர வேண்டும். இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்படுவது நாட் டுக்கு மிகவும் அவசியமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கடந்த வெள்ளிக்கிழமை 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமரின் பிறந்த நாள் வரை ஏன்காத்திருக்க வேண்டும்? பாஜகஆளும் மாநிலங்கள் பிரதமரின் பிறந்த நாளில் வழக்கத்தைவிட அதிகம் பேருக்கு தடுப்பூசிசெலுத்தியுள்ளன" என்று விமர் சித்துள்ளார். - பிடிஐ