

அடுத்து வரவிருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலிலும் பிராந்தியக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், அசாம் தவிர மற்ற நான்கிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே நேரடி மோதல்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓரிரு மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் காங்கிரஸுடன் அசாமில் மட்டும் பாஜகவிற்கு நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மாநிலக் கட்சிகளில், பாஜகவுடன், அசாம் கன பரிஷத்தும், காங்கிரஸுடன் பத்ருத்தீன் அஜ்மலின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கூட்டு சேர்ந்து போட்டியிட முயன்று வருகின்றன.
இந்த மாநிலக் கட்சிகளே அசாமில் ஆட்சி அமைப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கடந்த தேர்தலில் அஜ்மலின் கட்சிக்கு 18 தொகுதிகளில் வெற்றி கிட்டியிருந்தது. அசாமில் மட்டும் தனது முதல் அமைச்சர் வேட்பாளரை முன்னதாகவே பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுடன் இடதுசாரிகளுக்கு நேரடிப் போட்டி நிகழ்கிறது. இங்கு மக்களவை தேர்தலில் முதன்முறையாக ஒரு தொகுதி பெற்ற பாஜகவிற்கு சட்டப்பேரவை தேர்தலில் பெரிய அளவில் ஆதரவு இருக்காது எனக் கருதப்படுகிறது. காங்கிரஸிற்கு, திரிணமூல் அல்லது இடதுசாரிகளுடன் கூட்டு சேர வேண்டிய நிலை உள்ளது.
கேரளாவில் இந்தமுறை ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையுடன் களம் இறங்கும் பாஜகவிற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளுடன் மோதுகிறது. இதில், காங்கிரஸ் தனது பழைய கூட்டணிக் கட்சிகளான கேரளக் காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் நட்பை தொடருகிறது. இங்கு கடந்தமுறை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிக இடங்கள் பெற்றிருந்தது.
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு அதன் பிராந்தியக்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை இவ்விரு கட்சிகளுக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் நிலவுகிறது. இங்கு அதிமுக, திமுக மற்றும் தேமுதிகவிற்கு இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. எனவே, இந்த மூன்று கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் நிலை தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அடுத்த வருடம் வரவிருக்கும் உபி, உத்தராகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் எதிரொலிக்க வாய்ப்புகள் குறைவு எனக் கருதப்படுகிறது. எனினும், ஐந்து மாநிலங்களில் தம் பலத்தை காட்டி அடுத்த வருட தேர்தல்களில் ஆதாயம் பெற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக முயல்கின்றன.