

ரயில் விபத்துகளைத் தடுப்பதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து ஆளில்லா ரயில்வே குறுக்குப் பாதைகளும் (லெவல் கிராஸிங்) அகற்றப்படுவதுடன் விபத்து தவிர்ப்புக்கான புதிய திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருப்பதாவது:
சிறிய அளவிலான ரயில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தால் ஒரு உயிர் பலியானாலோகூட அது என்னை மிகவும் பாதிக்கச் செய்கிறது. விபத்தை முற்றிலும் தடுப்பதற்கு நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டி உள்ளது. குறிப்பாக ஆளில்லா குறுக்குப் பாதைகளில்தான் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.
எனவே, இத்தகைய விபத்துகளை தடுப்பதற்காக, நாட்டில் உள்ள அனைத்து அகல ரயில் பாதைகளிலும் உள்ள ஆளில்லா ரயில்வே குறுக்குப் பாதைகளும் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அகற்றப்படும். அத்துடன் ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தடுப்பதற்காக மோதல் தவிர்ப்பு முறை (டிசிஏஎஸ்) பொருத்தப்படும். இதன்மூலம் விபத்துகள் தடுக்கப்படும்.
மேலும் ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்காக, ஜப்பான் மற்றும் கொரிய ரயில் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நமது ரயில்வே துறை இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.