

மூன்றாவது முறையாக தான் அவமானப்படுத்தப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் வேதனையுடன் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் அமரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் அளித்தார். நீண்ட காலமாக பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்து வந்தது. இதனால், நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அதன் பின்னரும் கூட பஞ்சாப் காங்கிரஸில் பூசல் நின்றபாடில்லை. முதல்வர் அமரீந்தருக்கு எதிராகச் சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்துச் செயல்படுகிறார் என்று கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமரீந்த ராஜினாமா பெறும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
3 முறை அவமானப்படுத்தப்பட்டேன்..
தனது ராஜினாமா குறித்து அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், "நான் கட்சியில் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் மீது ஏதோ ஐயப்பாடு கட்சிக்கு இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய அவமானம். நான் இன்று காலையில் சோனியா காந்தியிடம் பேசும்போதே பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துவிட்டேன். இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். பஞ்சாப் காங்கிரஸில் உள்ள எனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பேன். அடுத்த முடிவை எடுப்பதற்கு முன்னர் அவர்களிடம் ஆலோசிப்பேன்" என்று கூறினார்.