

பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித் துறை சரமாரியாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாலிவுட் நடிகரான சோனு சூட் அருந்ததி, சந்திரமுகி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் அண்மைக்காலமாக நடிப்பைத் தாண்டி சமூகநலச் சேவைகளுக்காகவும் அறியப்பட்டார்.
இதனாலேயே, அண்மையில் இவர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கல்விக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், மக்கள் அபிமானம் பெற்றுள்ள சோனு சூடை பஞ்சாப் மாநிலத் தேர்தலில் களமிறக்க ஆம் ஆத்மிக்கு திட்டமிருப்பதாகவும் அதன் வெள்ளோட்டமாகவே அவருக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சோனு சூட் மும்பை வீட்டில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோனதனையில் ரூ.20 கோடி வரை சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள், "நடிகர் சோனு சூட் தனது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை எல்லாம், போலியான கடன் பத்திரங்களாகக் காட்டியுள்ளார். வரி ஏய்ப்புக்காகவே இதனை அவர் திட்டமிட்டு செய்துள்ளார்.
சோனு சூட் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக கோவிட் முதல் அலை தொடங்கி இந்த ஏப்ரல் மாதம் வரை ரூ.18 கோடி பல்வேறு வழிகளில் நிதியுதவியாகப் பெற்றுள்ளார். இதில் ரூ.1.9 கோடி நிதி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.17 கோடி பயன்படுத்தப்படாமல் அவரது கணக்கிலேயே உள்ளது" எனத் தெரிவித்தனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி:
ஆனால், சோனு சூடுகு மக்கள் அபிமானம் இருப்பதால் எங்கே ஆம் ஆத்மி அவரை பஞ்சாப் தேர்தலில் களமிறக்கினால் தங்களுக்குப் பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் மத்திய அரசு வழக்கம்போல் வருமான வரித் துறையை ஏவிவிட்டு இந்த சோதனையை நடத்தியுள்ளதாக சோனு சூடுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது.