

பாட்னா அறிவியல் மாநாட்டில் தனது மகனுக்குப் பதிலாக கலந்து கொண்ட ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கலகலப்பாக பேசினார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் லாலுவின் மகனும் மாநில சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வேறு சில அலுவல் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மகனுக்கு பதிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் லாலு பிரசாத் யாதவ்.
லாலு பேசியதாவது:
"மருத்துவ அறிவியலில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. முன்னதாக சிறு சிராய்ப்புகள், காயங்களுக்கு சிறுநீரை பயன்படுத்தினோம். அதற்குப் பதிலாக தற்போது டெட்டால் பயன்படுத்துகிறோம். டெட்டால் கொண்டு கைகளையும் சுத்தம் செய்கிறோம். மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இது மட்டுமே.
ஹோமியோபதி மருத்துவமே சிறந்தது. அலோபதி மருத்துவர்கள் எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை செய்கின்றனர். ஆனால், ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துபவர்கள் மட்டுமே 80 ஆண்டுகள் வரையிலும்கூட வாழ்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்கள் துணையை இணையம் மூலம் தேர்வு செய்கின்றனர். எவ்வளவு வேகமாக இந்த பந்தம் அமைகிறதோ அதே வேகத்தில் திருமணம் முறிந்தும் விடுகிறது. எனவே திருமண விஷயத்தில் இளைஞர்கள் பெற்றோர் அறிவுரையை கேட்பதே நல்லது.
அரசுப் பணி புரிவோர் ஓய்வு வயதை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு ஓய்வுக்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டாது. அதேபோல் நமக்குத் தேவை ஸ்மார்ட் நகரங்கள் அல்ல ஸ்மார்ட் கிராமங்கள். இதை நோக்கியே அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்."
இவ்வாறு லாலு பேசினார்.
லாலுவின் கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ள மாநில பாஜக தலைவர் நந்த் கிஷோர் யாதவ், "அறிவியல் மாநாட்டில் மகனுக்கு பதிலாக லாலு பிரசாத் கலந்து கொண்டதன் மூலம் பிஹார் அரசை யார் நடத்துகிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. லாலுவை சூப்பர் முதல்வர் என நிதிஷ் குமார் அங்கீகரிக்க வேண்டும்" என கிண்டல் செய்துள்ளார்.