Published : 17 Sep 2021 12:41 PM
Last Updated : 17 Sep 2021 12:41 PM

2020-ம் ஆண்டில் இந்தியாவில் 50 ஆயிரம் சைபர் குற்றங்கள்; உ.பி. முதலிடம்; 578 போலிச் செய்திகள்: என்சிஆர்பி தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 11.8 சதவீதம் அதிகரித்துள்ளன. சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் தொடர்பாக 578 சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 11.8 சதவீதம் அதிகமாகும்.

ஒரு லட்சம் பேருக்கு என்ற விகிதத்தில் சைபர் குற்றங்களை எடுத்துக்கொண்டால் கடந்த 2019-ம் ஆண்டில் 3.3 சதவீதம் இருந்த நிலையில், 2020்-ம் ஆண்டில் 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 44,735 ஆக இருந்த நிலையில், 2018-ம் ஆண்டில் 27,248 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 47 வங்கி மோசடி குற்றங்கள், ஆயிரத்து 93 ஓடிபி மோசடிகள், 1,194 கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகள், 2,160 ஏடிஎம் தொடர்பான குற்றங்கள் நடந்துள்ளன.

2020-ம் ஆண்டில் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் தொடர்பாக 578 சம்பவங்கள் நடந்துள்ளன. இணையதளம் மூலம் பெண்களை, குழந்தைகளை மனரீதியாகத் துன்புறுத்துதல் தொடர்பாக 972 வழக்குகள், போலியான கணக்கு வைத்து மோசடி செய்ததாக 149 வழக்குகள், புள்ளிவிவரங்களைத் திருடியதாக 98 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு நடந்த சைபர் குற்றங்களில் 60 சதவீதம் மோசடிரீதியான குற்றங்களாகவே நடந்துள்ளன. அதாவது 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்களில் 30 ஆயிரத்து 142 வழக்குகள் மோசடி ரீதியான குற்றங்களாக உள்ளன.

பாலியல்ரீதியான துன்புறுத்தல், பயன்படுத்துதல் தொடர்பாக 3,293 வழக்குகள் (6%), மிரட்டல் தொடர்பாக 2,400 வழக்குகள் (4.9%) பதிவாகியுள்ளன.

அதிகபட்ச சைபர் கிரைம் குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளன. உ.பி.யில் மட்டும் 11 ஆயிரத்து 97 வழக்குகளும், கர்நாடகாவில் 10,741 வழக்குகளும், மகாராஷ்டிாவில் 5,496 வழக்குகளும், தெலங்கானாவில் 5,024 வழக்குகளும், அசாமில் 3,530 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

குற்றவீதங்கள் அடிப்படையில் கர்நாடகத்தில் 16.2 சதவீதமும், தெலங்கானாவில் 13.4 சதவீதமும், அசாமில் 10.1 சதவீதமும், உ.பியில் 4.8 சதவீதமும், மகாராஷ்டிராவில் 4.4 சதவீதமும் பதிவாகியுள்ளன. டெல்லியல் 168 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 0.8 சதவீதம் மட்டும் குற்றவீதம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x