

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ரத்த தான முகாம் முதல் இலவச ரேஷன்பொருட்கள் வழங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் பிறந்நாளான இன்று 1.50 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 1.50 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியதில்லை, அதை அடை மத்திய அ ரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பிரதமர் மோடியின் 20 ஆண்டுகள் அரசியல் சேவையைப் பாராட்டும் வகையில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதிவரை மிகப்பெரிய பிரச்சாரத்தையும் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால அரசியல் பயணத்தை விளக்கும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியையும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். இந்தமுறை இந்த சேவைகளை வழங்குவது 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடிக்கு நாளை பிறந்தநாள். அவருக்கு மிகச்சிறந்த பரிசாக அமையும் வகையில் நாளை தடுப்பூசி செலுத்தாத உங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துங்கள். இதுதான் பிரதமர் மோடிக்கு சிறந்த பரிசாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்
இற்கிடையே பிரதமர் மோடி புகைப்படம் அச்சிடப்பட்ட 1.40 கோடி இலவச ரேஷன் பொருட்களை வினியோகிக்கவும், பாஜகவைச் சேர்ந்த 5 கோடி தொண்டர்கள் பிரமதர் மோடியின் பதாகைகளை சுமந்து சேவைகளை செய்யவும் பாஜகதிட்டமிட்டுள்ளது.
இது தவிர மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், சார்பில் பிரதமர் மோடி பரிசாகப் பெற்ற அயோத்திராமர் கோயில் மாதிரி சிலை, சார் தாம், சிலைகள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.