

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இம்முறை ஜம்போ அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன் உட்பட 75 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருமுறையாவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ குறைந்த பட்சம் சிறப்பு உறுப்பினராகவாவது பதவி வகிக்க வேண்டுமென பலர் தவம் கிடக்கின்றனர். ஆனால், இதில்சிலரின் வேண்டுதல் மட்டுமே நிறைவேறுகிறது.
ஆந்திர அரசு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவை மாற்றி அமைக்கிறது. இதில், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பின்னர், தனது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டியை முதன்முறையாக தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக்கினார். இவரது பதவிக்காலம் கடந்த மாதம் நிறைவடைந்தது. அதன் பின்னர் யாருக்கு அந்தப் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 2-ம் முறையாக ஒய்.வி. சுப்பாரெட்டிக்கே அப்பதவி வழங்கப்பட்டது. இதனால், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியைப் பெற பலரும் முயற்சித்தனர்.ஒருசிலர், மத்திய அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களைப் பெற்று இப்பதவிக்கு வர முயன்றனர்.
பொதுவாக இந்த அறங்காவலர் குழுவில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, தெலங்கானாவைச் சேர்ந்த சிலரையும்ஆந்திர அரசு நியமனம் செய்து வருகிறது. இது வழக்கமாக நடைபெறும் மரியாதைக்குரிய செயலாகும். இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஆந்திர அரசுஇதுதொடர்பான அரசாணையை வெளியிட்டது.
அதன்படி, அறங்காவலர் குழுதலைவர் சுப்பா ரெட்டி உட்பட மேலும் 24 பேரை உறுப்பினர்களாக ஆந்திர அரசு நியமனம் செய்தது. இதுதவிர சிறப்பு விருந்தினர்களாக மேலும் 50 பேரின் பெயர்களும் வெளியிடப்பட்டன. இதில், திருப்பதிசட்டப்பேரவை உறுப்பினர் கருணாகர் ரெட்டி மற்றும் சந்திரகிரி தொகுதிஎம்எல்ஏ.வும் திருப்பதி நகர வளர்ச்சிக் குழும தலைவருமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி ஆகியோர் (சிறப்பு உறுப்பினர்கள்) நேற்று திருமலையில் ஏழுமலையானை தரிசித்த பின்னர் பொறுப் பேற்றுக்கொண்டனர்.
திருமலையில் மேற்கொண்ட திருப்பணிகளால் 4-வது முறையாக அறங்காவலர் குழு உறுப்பினர்
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான என்.சீனிவாசனுக்கு 4-வது முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004, 2008, 2019-ம்ஆண்டுகளைத் தொடர்ந்து, 2021-லும் என 4 முறை இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத் துள்ளது.
என்.சீனிவாசனின் சமூக அக்கறையைக் கருத்தில்கொண்டுஇதுவரை யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக 4 முறை இப்பதவிவழங்கப்பட்டுள்ளது. 2007-ல் திருமலையில் லட்டு தயாரிக்கும்பிரிவில், இவர் அளித்த நிதியில் ‘கன்வேயர் பெல்ட்’ பொருத்தப்பட்டது. இதன்மூலம் லட்டுகளை வெகு சுலபமாக மடப்பள்ளியிலிருந்து விநியோக மையத்துக்கு கொண்டு செல்ல முடிகிறது. 2010-ல் இவர் சார்பில் பூந்தி தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இவரின் தொண்டு மேலும் தொடருமென தேவஸ்தானம் எதிர்பார்க்கிறது.
தமிழகத்தில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியின் திமுக எம்எல்ஏ.வான நந்தகுமாருக்கு முதன்முறையாக அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி, தமிழக அரசின் சிபாரிசின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று முதன்முறையாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கும் உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.