

இந்தியாவில் பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜீஷான், ஒசாமா ஆகிய 2 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
ஜீஷான், ஒசாமா ஆகிய 2 தீவிரவாதிகளை டெல்லி போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தபோது, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இத்தகைய பெரிய அளவு ஆர்டிஎக்ஸ் பரந்த அளவில் அழிவை ஏற்படுத்தக் கூடியது. இது தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில் இந்தியாவில் பாலங்கள், ரயில்வே தண்டவாளங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பை போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்துவது அவர்களின் திட்டம்.
ஜீஷான், ஒசாமா ஆகிய இருவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இவர்கள் ஓமன் நாட்டில் இருந்து கடலில் மோட்டார் படகில் பயணித்து, குவாடர் துறைமுறைமுகம் மூலம் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். குவாடர் அருகில் உள்ள ஜியோனி நகரில் உள்ள பண்ணை வீட்டில் பயிற்சி பெற்றுள்ளர். இவர்களுடன் பெங்காலி பேசும் மேலும் 15 இளைஞர்களும் பயிற்சி பெற்றுள்ளனர்.வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் இருந்து தீவிரவாத தடுப்புப் படை போலீஸார் டெல்லி விரைந்துள்ளர். டெல்லி சிறப்பு படை போலீஸாரை அவர்கள் சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிர மற்றும் டெல்லி போலீஸாரின் கூட்டு விசாரணைக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.