

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் வர்த்தகம் ஆன நிலையில் சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சங்களை எட்டியுள்ளன.
சர்வதேச பங்குச் சந்தைகளின் உறுதித்தன்மை மற்றும் டெலிகாம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சீரமைப்புத் திட்டங்கள் ஆகியவை பங்குச் சந்தைக்குச் சாதகமான போக்கை உருவாக்கின. இதனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதன்முறையாக 59000 புள்ளிகளைக் கடந்தது. அதிகபட்சமாக 59204 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில் 418 புள்ளிகள் உயர்வுடன் 59,141 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டி அதிகபட்சமாக 17,645 வரை உயர்ந்தது. வர்த்தக முடிவில் 107 புள்ளிகள் உயர்வுடன் 17,626 புள்ளிகளில் வர்த்தகமானது.
சென்செக்ஸில் 16 பங்குகள் ஏற்றத்திலும் 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இண்டஸ்இந்த் வங்கி, ஐடிசி, எஸ்பிஐ, மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை சிறப்பாக செயலாற்றி 2 முதல் 7 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்டவை இறக்கம் கண்டன.