

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவின் உடல் கர்நாடகாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சியாச்சின் பனிமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 6 நாட்களுக்கு பின் ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்வதற்காக விமானம் மூலம் அவரது உடல் நேற்று அதிகாலை ஹூப்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நேரு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஹனுமந்தப்பாவின் உடலுக்கு முதல்வர் சித்தராமையா, மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பெடதூருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியுடன் புடைசூழ ஊர்வலமாக வந்தனர்.
பெடதூரில் உடல் வந்தடைந்ததும், ஊர் மக்களின் அஞ்சலிக்காக ஹனுமந்தப்பா படித்த அரசுப் பள்ளியில் அவரது உடல் வைக்கப்பட் டது. அதை கண்ட அவரது மனைவி மற்றும் குடும் பத்தினர் கதறி அழுதது நெஞ்சை பிளப்பதாக இருந்தது. பின்னர் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஹனுமந்தப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டை சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சோழன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
ரூ. 25 லட்சம் நிதியுதவி
நாட்டின் எல்லைக் காக்கும் பணியில் உயிரிழந்த ஹனுமந்தப்பா உட்பட கர்நாடகாவை சேர்ந்த 3 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித் துள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 6 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.