Last Updated : 16 Sep, 2021 05:12 PM

 

Published : 16 Sep 2021 05:12 PM
Last Updated : 16 Sep 2021 05:12 PM

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் 28 ஆயிரம் பலாத்காரங்கள், குழந்தைகளுக்கு எதிராக 1.28 லட்சம் குற்றங்கள்: என்சிஆர்பி தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

2020-ம் ஆண்டில் இந்தியாவில் தினசரி 77 பலாத்காரக் குற்றங்கள், 80 கொலைகள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) நேற்று 2020-ம் ஆண்டுக்கான குற்ற விவரங்களை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

''2020-ம் ஆண்டில் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டில் மட்டும் 29 ஆயிரத்து 193 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அதிகமாகும். கடந்த 2019-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 915 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தினசரி 79 கொலை வழக்குகள் பதிவாகின.

2020-ம் ஆண்டில் தினசரி 77 பலாத்கார வழக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 28 ஆயிரத்து 46 பலாத்காரங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் கடந்த ஆண்டில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 503 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.3 சதவீதம் குறைவாகும். கடந்த 2019-ம் ஆண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 326 வழக்குகள் பதிவாகின.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 28 ஆயிரத்து 46 பலாத்கார வழக்குகளும், அதில் 28,153 பேரும் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5,310 பலாத்காரங்கள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 2,769 பலாத்காரங்கள், மத்தியப் பிரதேசத்தில் 2,339, மகாராஷ்டிராவில் 2,061 பலாத்காரங்கள் நடந்துள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றவீதம் என்பது, ஒரு லட்சம் பெண்களுக்கு 56.5 சதவீதம் எனக் குறைந்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டில் 62.3 சதவீதமாக இருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கணவரால், மாமியார் வீட்டுக் கொடுமை என்ற வகையில் கடந்த 2020-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 549 வழக்குகள் பதிவாகின. இதில் 62,300 கடத்தல் வழக்குகள் அடங்கும்.

பலாத்காரம் தவிர்த்து பெண்களுக்கு எதிராக 85,392 தாக்குதல் வழக்குகள், பெண்களின் நடத்தை மற்றும் பலாத்கார முயற்சி என்ற வகையில் 3,741 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் கடந்த ஆண்டு 105 ஆசிட்வீச்சு வழக்குகள், 6,996 வரதட்சணைக் கொடுமை வழக்குகளும் பதிவாகின. கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பெண்களைக் கடத்தும் வழக்குகள் எண்ணிக்கை 19 சதவீதம் குறைந்துள்ளது.

கடத்தல் வழக்கில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 12,913 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 9,309 வழக்குகள், மகாராஷ்டிராவில் 8,103 வழக்குகள், பிஹாரில் 7,889 வழக்குகள், மத்தியப் பிரதேசத்தில் 7,320 வழக்குகள் பதிவாகின.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவாகின. இதில் கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 13.2 சதவீதம் குறைவாகும். 2019-ம் ஆண்டில் 1.48 லட்சம் வழக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 42.6 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 38.8 சதவீதம் பாலியல் வழக்குகளும் அடங்கும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 2020-ம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு குற்ற சதவீதம் 28.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டில் 33.2 சதவீதமாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக கடந்த 2020-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் பதிவு 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரோனா தொடர்பான விதிமுறை மீறல்கள்தான் காரணமாகும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x